பழங்கற்கால மனிதன் வேட்டைச் சமூகமாக வாழ்ந்து வந்தான் . பரிணாம வளர்ச்சியினாலும் மனித அடர்த்தி பெருக்கத்தாலும் இனக்குழுவாக பிரிந்து கால்நடை சமூகமாகவும் மாறத் தொடங்கினான் . பின்னர் நிலையான வாழ்க்கை ( settled ) வாழ எண்ணி ஆற்றுப்படுகை அருகில் குடியிருப்பை ஏற்படுத்திக் கொண்டு வேளாண்மை கற்றுக்கொண்டான் . வேளாண்மைக்கு கால்நடை அவசியமாயிற்று . அவ்வாறு வாழ்ந்த காலத்தில் மற்ற இனக்குழுவிடமிருந்தும் வனவிலங்குகளிடமிருந்தும் கால்நடைகளுக்கு ஆபத்து உண்டாயிற்று . கால்நடைகளை காப்பாற்ற மற்ற இனக்குழுவோடும் ( ஆநிரை போர் ) , ஆபத்து ஏற்படுத்தும் வனவிலங்குடனும் சண்டையிட தொடங்கினான் . அவ்வாறு ஏற்படும் சண்டையில் இறக்கும் வீரர்களை அக்குழுவினர் தெய்வமாக எண்ணி நடுகல் வைத்து வணங்கினர் .அவ்வாறு வைத்த நடுகல் பற்றி காண்போம் .
திருப்பூர் மாவட்டம் , அவினாசி பொங்குபாளையத்தில் உள்ள சிறு வீட்டு குடியிருப்புக்கு அருகில் சாலை ஓரத்தில் புலிக்குத்தி நடுகல் ஒன்று உள்ளது. தான் செல்வமாக கருதிய கால்நடைகளை , தாக்க வரும் புலியை எதிர்த்து போரிட்டு இறந்த வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் இது . இவ்வீரனின் நினைவாக இந்த நடுகல் நடப்பட்டுள்ளது . இந்த நடுகல்லில் வீரனின் முகம் நேராகவும் , தலையில் சிறு கொண்டையும் காட்டப்பட்டுள்ளது . வீரன் தன்னை தாக்க வரும் புலியை இருகைகளாலும் ஈட்டியை கொண்டு தாக்குவது போலவும் , புலி தன் பின்னங்கால்களை தரையில் ஊன்றியவாறும் முன்னங்கால்களை வீரனின் தொடை மீது பதித்துள்ளது போலவும் காட்டப்பட்டுள்ளது . இதில் புலியின் உருவம் வீரனை விட சிறியதாக காட்டப்பட்டுள்ளது . இதில் பொறிந்த நிலையில் கல்வெட்டுகள் காணப்படுகிறது . கல்வெட்டு வாசகம் :
"தேவரு , புலிகு (த் ) தி பட்டார் கல் "
சில வரிகள் அழிந்து விட்டன . ஆதாவது தேவரு என்பவர் கால் நடைகளை காப்பாற்ற புலியுடன் சண்டையிட்டு இறந்தார் என்பன செய்தி ஆகும் . இது சுமார் 1200 வருடங்கள் பழமையானதாக கருதப்படுகிறது . இக்கல்லை இங்குள்ள மக்கள் வழிபடுகின்றனர் .
No comments:
Post a Comment