Tuesday 5 October 2021

விஜயமங்கலம் கரிவரதராஜ பெருமாள் கோயில், ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு

கொங்கு நாட்டிற்கு உட்பட்ட குறுப்பு நாட்டில் அமைந்த புகழ்பெற்ற ஊர் "விஜயமங்கலம்" . பழங்காலத்தில் "வாகை புத்தூர்" என்றும் " வாகை" என்றும் அழைக்கப்பட்டதாக கல்வெட்டுக்கள் மூலம் உறுதி செய்யப்படுகிறது . இங்கு புகழ்பெற்ற "நெட்டை கோபுரம்" என்னும் சமணக் கோயில், நாகேஸ்வர சுவாமி கோயில் , விஜயபுரி அம்மன் கோயில் , கரிவரதராஜ பெருமாள் கோயில் மற்றும் பல கோயில்கள்  உள்ளன.   கரிவரதராஜ பெருமாள் கோயில் பற்றி இங்கு காண்போம் .


           "சித்திரமேழி விண்ணகர  நாயனார் கருமாணிக்க ஆழ்வார் " என்று  இறைவனையும் , "திருமேற்கோயில் " "சித்திரமேழி விண்ணகரம் " என்று கோயிலையும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது . உழவை தொழிலாகக் கொண்டு ஏரைத் தெய்வமாக வணங்கிய வேளாண் குடியை சேர்ந்த வெள்ளாளர்களின் குழுதான் "சித்திரமேழி பெரியநாட்டார் சபை " என்பது . அவர்கள் பெயரில் இக்கோயில் அமையப் பெற்றிருக்கிறது . " சித்திர மேழி விண்ணகர கருமாணிக்க ஆழ்வார்" என்று கல்வெட்டில் குறிப்பிடப்படும் இறைவன் பெயர் இப்போது "கரிவரதராஜ பெருமாள்" என்று அழைக்கப்படுகிறது . கருவறையில் பெருமாள் , ஸ்ரீ தேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் . கோயிலில் கருடாழ்வார் , ராமானுஜர் , நம்மாழ்வார் உருவங்கள்  உள்ளன . கருவறையை சுற்றி  மூன்று தேவகோஷ்டங்களும் அவற்றிற்கு மேலே வேலைபாடில்லாத மகர தோரணங்கங்களும்  உள்ளன . மகாமண்டபம் தற்போது கட்டப்பட்டது ஆகும் . கோயிலின் முன் கருடகம்பம் உள்ளது . இனி கல்வெட்டுகளைப் பற்றி காண்போம் .

1) வீரபாண்டியன் : கல்வெட்டுகள் :1, 2 ,4 ,11

கொங்கு நாட்டின் முதல் கொங்கு பாண்டியரனாக வீரபாண்டியன் (கி.பி 1202 - 1280) கருதப்படுகிறார் . "திரிபுவன சக்கிரவர்த்தி" "கோராசகேசரி வர்மன் " என்பது  வீரபாண்டியனின் பட்டப்பெயர் என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது . முதலில் கோயில் கருவறையின் வடக்கு மற்றும் தெற்கு சுவற்றிலும் , முன்மண்டப வடக்கு சுவற்றிலும் உள்ள கல்வெட்டுகளை பற்றி காண்போம் . 

       ஸ்ரீவீரசோழச் வளநாட்டு பிரமதேயம் கற்றாயங்காணி வீர சோழர் சதுர்வேதி மங்கலத்துச் சபையார், விஜயமங்கலம் சித்திரமேழி விண்ணகர நாயனார் கோயில் நம்பிமார்களுக்கும் ,ஸ்ரீ வைணவர்கட்கும் கொடுத்த கொடை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது . கூடூர் ஊரார் , பெருமாளுக்கு நந்தா விளக்கு எரிக்க மாதம் தோறும் 3 நாழி எண்ணெய் சந்திர சூரியன் உள்ளவரை கொடுக்க ஒப்புக் கொண்ட கல்வெட்டும் ,  பெருமாள் அருளால் கண் பார்வை பெற்ற ஒருவர் நந்தவனம் கொடையளித்த கல்வெட்டும் உள்ளது .

      வடகரை நாட்டுக் குறிச்சியைச் சேர்ந்த வெள்ளாளரான வேந்தன் குல வேந்தன் வாமதேவன்  சந்தியா விளக்கு எரிக்க ஸ்ரீ யக்கி பழஞ்சலாகை 4 அச்சுக் கொடையாக கொடுத்தான் .கோயில் நம்பிமார் மூவர் விளக்கு எரிப்பதாக ஒப்புக்கொண்டனர் . ஸ்ரீ யக்கி காசு என்பது கொங்கு நாட்டில் சமண சமயம் செல்வாக்கு  பெற்ற காலத்தில் வெளியிடப்பட்ட காசு என்று கூறப்படுகிறது .காங்கய நாட்டுப் பரஞ்சேர் பள்ளி வேளாளர் ஆவகுல வீரகாமிண்டன் உடையாண்டான் என்பவர் மனைவி வாமதேவர் மகள் பிள்ளை அம்மை சந்தியா தீபவிளக்குக்கு ஸ்ரீயக்கி பழஞ்சலாகை அச்சு ஒன்று கொடுத்துள்ளார் .


2) வீரராசேந்திரன் கல்வெட்டு :
கல்வெட்டு 3
வீரரசேந்திரன் (கி.பி 1217) கொங்கு சோழர்களில் பெரும் புகழ் பெற்றவன் . வட கொங்கு தென் கொங்கு இரண்டையும் ஆண்ட பெருமை பெற்றவன் .இவன் ஆட்சி சுமார் 45 ஆண்டுகள் நீடித்ததாக கூறப்படுகிறது . இவன் கல்வெட்டுகள் கொங்கு நாட்டில் அதிகமாக கிடைக்கிறது .

இராசகேசரிவர்மரான திரிப்புவனச் சக்கிரவர்த்தி வீர ராசேந்திர தேவனின் 10 வது ஆட்சியாண்டில் கொடுக்கப்பட்ட கொடை இடக்கை சாதியார் 99 பேர் கொண்ட குழு பாதுகாப்பில் இருந்தது . விஜயமங்கலம் வெள்ளாள சாத்தந்தை குல சிறியான் தேவனான முடிகொண்ட சோழ மாராயன் அமுதுபடிக்கு மூலப்பொருளாக இருபத்து ஒன்பது ஆச்சு பண்டாரத்தில் வைத்தான் . இதன்மூலம் நாள்தோறும் நான்கு நாழி அரிசி அமுது செய்ய  அளிக்கப்பட்டது . சோழர் காலத்தில் இடங்கை வலங்கை பிரிவுகள் இருந்ததை இக்கல்வெட்டு சுட்டிக்காட்டுகிறது .


3) சுந்தர பாண்டியன் (கி.பி 1308)

கல்வெட்டு 5, 6 ,7 ,8 , 10

       விஜயமங்கலத்து படைத்தலை வேளாளர் திருவானி பெரிய தேவனான வாணராயன் மற்றும் விச்சன் சீட்டனான தப்பிலாவாசகன் , பாண்டிய நாட்டைச் சேர்ந்த சூரியதேவனான குவலயத்தரையன் , விசயமங்கலத்துக் கைக்கோளரில் குமரன் எடுத்தானான சிங்கப்பெருமாள் , குன்றத்தூர் வேளாளர் கொள்ளிகுலச் சொக்கன் என்பவர் மனைவியும் உடையான் என்பவர் மகளுமான குப்பாண்டி ஆகிய நால்வரும் இக்கோயிலுக்கு சந்தியா தீபம் வைக்க பொன் ஓர் அச்சுக்காக பத்து பணம் மூலப்பொருளாக வைத்தார் . 


4)மூன்றாம் வீரவல்லாளன் (கி.பி 1327)

கல்வெட்டு 9

              கருமாணிக்க பெருமாளுக்கு பல நிவந்தத்திற்கு புன்செய் நிலமும், குளமும், குளத்து நீர் பாய்கின்ற வயல்களும் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது .

5) இரண்டாம் விக்கிரமசோழன் ( கி.பி 1257)

கல்வெட்டு 12

படைத்தலை வேளாளர் நங்கன் என்பவர் தம் கொடையாக திருநிலைக்கால்

செய்தளித்தார்.

                  இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் இக்கோயிலின் வரலாற்றையும் பெருமையையும் உணர முடிகிறது .











No comments:

Post a Comment