Friday 23 February 2018

தொண்டை நாட்டின் காலத்தால் மறைந்து தற்போது வெளி உலகுக்கு வந்த சமண சமயத்தின் தடையங்கள் மற்றும் தீர்தங்கரர்கள் - அஹிம்சை நடையும்... என் அனுபவங்களும்.. THE REMAINS OF JAINISM - AN AHIMSA WALK

23rd February 2018
நூறு, ஆயிரம் என பழைமை வாய்ந்த வரலாற்றை தன்னிடத்திலே புதைத்துக்கொண்ட இடங்களையும், கோவில்களையும், சிற்பங்களையும் காண நண்பர்களுடனும், மரபு சார்ந்த குழுக்களுடனும் கடந்த 10 வருடங்களாக பயணித்துக் கொண்டு இருக்கின்றேன். நான் செல்லும் மரபு நடைகளில் சமயமும் / மதமும் அதைச் சார்ந்த இடங்களும் முன்னிலைப்படுத்தப் படுவது இல்லை. நான் நடு நிலையாளனாக, இருந்தே அந்தந்த இடங்களைக் கண்டு இருக்கின்றேன். அப்போது தான் அதைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள முடியும் என்பது என் எண்ணம். அப்படி சென்ற சமணம் சார்ந்த இடங்கள் பல.. அவற்றுள் சில, திருநாதர் குன்று, தொண்டூர், கரந்தை, சீயமங்கலம், செய்யூர், விஜயமங்கலம், திங்களூர், ஐய்யர் மலை,  திருப்பரங்குன்றம், எல்லோரா குகைகள்.

இதுவரை சமணத்தைப் பற்றி நான் அறிந்தது மகாவீரரும், புலால் உண்ணாமை மட்டும்தான். அதுவும் முழுவதுமா, என்று பார்த்தால், இல்லை என்பதே உண்மை. மற்றபடி சமணத்தைப்பற்றி எனக்கு அதிகமாக எதுவும் தெரியாது. ஆனாலும் சமணத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மட்டும் அதிகமாக இருந்தது. இத் தருணத்தில்தான் சசிகலா அவர்களின் முகநூலில் சமணர்களின் 49வது அஹிம்சை நடையைப்பற்றிய அறிவிப்பைக் காண நேர்ந்தது. இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு மேலும் சமணத்தைப் பற்றியும், குறிப்பாக தமிழ் சமணர்கள், அவர்கள் வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள், ஜீனாலயங்கள், அதில் உறையும் சமண தீர்தங்கரர்கள், கட்டிடக்கலை, சிற்பக்கலைகள் என மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே என் அவா.

அப்படி நான் கண்டவற்றை, அறிந்தவற்றை என் முக நூலிலும், வலைத்தளத்திலும் பதிவு இட்டுக்கொண்டு இருக்கின்றேன். நண்பர்களின் ஊக்கமே என்னை மேலும் இப்பணியில் ஈடுபட வைக்கின்றது. வயதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வது இல்லை. தீர்தங்கர்களின் அருளால் நான் கற்றவை என் வலைத்தளம் மற்றும் முகநூல் மூலமாக ஒரு சிலருக்கேனும் பயனுள்ளதாக இருந்தால்.. அதுவே போதும் எனக்கு.

49th அஹிம்சை நடை.  ஜனவரி 07, 2018.
திருமதி சசிகலா அவர்கள் இந்த மரபு நடையில் ஏனாத்தூர், அசநெல்லிக்குப்பம், அரும்பாகம், உப்புக்குளம் மற்றும் காவனூர் ஆகிய ஊர்களில் புதியதாகக் கண்டு எடுக்கப்பட்ட  தீர்த்தங்கரர் சிலைகளையும் முன்பே கண்டுபிடிக்கப்பட்ட தீர்த்தங்கர்களைத் தரிசிக்கச் செல்வதாக கூறினார். அங்கு செல்வதற்க்கான வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அது ஆதம்பாக்கம் ஜீனாலயத்தில் இருந்து கிளம்புவதாகவும் கூறினார். ஆதம்பாக்கம் ஜீனாலயம் என் வீட்டிற்க்கு அருகிலேயே இருப்பதால் எதுவும் யோசிக்காமல் வருவதாக ஒப்புக்கொண்டேன். வாகனம் ஒரு இருபது நிமிடம் தாமதமாக புறப்பட்டது. முன்பே அறிமுகமான எனது முகநூல் மகள்களைக் கண்ட உடன் மிகவும் மகிழ்வாக இருந்தது. முதலில் நாங்கள் சென்ற இடம் ஏனாத்தூர். ஸ்ரீபெரும்புதூர் அருகே.

மஹாவீரர் - ஏனாத்தூர்.
மஹாவீரர் சிலை சமீபத்தில் அந்த ஊரில் அகழ்ந்து எடுக்கப்பட்டதாகவும், சிறு திருத்தங்களுடன் ( முகம், முக்குடை, லாஞ்சனம் ), ஒரு ஜீனாலயம் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் முடிந்து மண்டல பூஜையின் கடைசி நாள் என்றும் கூறினர். மஹாவீரர் கற்பலகையில் புடைசிற்பமாக செதுக்கப்பட்டு இருந்தது. சாமரதாரிகள் இல்லாமல் சாமரம் மட்டும் காட்டப்பட்டு இருந்தது.  நாங்கள் சென்ற போது பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தன. மஹாவீரரை மட்டும் தரிசித்து விட்டு அசநெல்லிக்குப்பம் நோக்கி எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.


தீர்த்தங்கரர் – அசநெல்லிக்குப்பம்.
அசநெல்லிக்குப்பம் ஊரை நெருங்கும் போது சென்னையை விட்டு தொலை தூரபிரதேசத்திற்க்கு வந்து விட்ட ஒரு இனம் தெரியாத உணர்வு ஏற்பட்டது. எங்கு திரும்பினும் பச்சைக் கம்பளம் விரித்தாற்ப்போல பச்சை பசேல் என்ற நெல் வயல்கள். அதன் ஊடே ஓங்கி வளர்ந்த தென்னை மரங்கள். மேலும் ஆங்கங்கே திட்டு திட்டாக நம் பூமியைத் தரிசு ஆக்க வந்த சீமை கருவேல மரங்கள் ( வேலிக்காத்தான் மரங்கள் ). வாகனத்தை விட்டு இறங்கிய உடன் காலைப் பலகாரம் இட்டிலி, இடியாப்பம், பொங்கல் வடையுடன். விருந்திட்டவர்களின் மனம் கோனாமல் இருக்க எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டு அஹிம்சை நடையை ஆரம்பித்தோம். இரு வீதிகளின் வழியாக கிராமத்து மண் வாசனையுடன் சென்ற அஹிம்சை நடையில் ஊர்காரர்களும் பள்ளிக்கூட குழந்தைகளும் கலந்து கொண்டனர். சமணத்தின் கொள்கைகளை வலியுறித்தியும், வரலாற்று சிறப்பு வாய்ந்த சின்னங்களை காக்கவேண்டியும் கோசம் எழுப்பிய வண்ணம் வினாயகர் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். 

முழங்கால் அளவு சதுப்பு நிலத்தில் 500 ஆண்டுகளுக்குமேல் புதையுண்டு வெளி உலகுக்கு வந்த ஆயிரம் ஆண்டு பழைமையான தீர்த்தங்கரரை அன்று காலை தான் ஜேசிபி மூலம் வினாயகர் கோவிலுக்கு கொண்டு வந்ததாகக் கூறினர். தீர்த்தங்கரரின் தலைக்கு மேல் உடைந்து இருந்தது. இரு சாமரதாரிகள் காட்டப்பட்டு இருந்தனர்... கால் பகுதியிலும் சிறிது பின்னம் ஏற்ப்பட்டு இருந்தது. 
  
தீர்தங்கரின் தரிசனத்திற்க்கு பிறகு திருமதி நிவேதிதா அவர்கள் சிறுவர்களுக்கு நீதி போதனை கதையைக் கூறினார். அதில் சிறுவர்களையும் ஈடு படுத்தியது அருமை. பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகமும் வழங்கப்பட்டது.

எங்களின் அடுத்த இலக்கு அரும்பாக்கம். இது முன்பே அறிவித்த பட்டியலில் இல்லை என்றாலும், அரும்பாக்கம் சிவன் கோவிலில் ஒரு தீத்தங்கரர் சிலை இருப்பதாக வந்த தகவலின் படி அரும்பாக்கத்தை நோக்கி பயணித்தோம்.





தீர்த்தங்கரர் - அரும்பாக்கம்
இவர் அரும்பாக்கத்தில் சிவன் கோவிலில் வினாயகர் மற்றும் நாகர்களுடன் அமர்ந்து இருந்தார். பார்ப்பதற்க்கு மிகவும் அழகாகவே இருந்தார். அவரின் இரு பக்கமும் சாமரதாரிகளும் காட்டப்பட்டு இருந்தனர். பீடத்தில் லாஞ்சனம் எதுவும் இல்லாததால் இவர் யார் என்று இனம் காண முடியவில்லை என்றும் சுமார் ஆயிரம் வருடத்திற்கு முற்பட்டவர் என்று ஆய்வாளர்கள் கூறினர். இவர் அவ்வூரில் வயல் வெளியில் கிடைத்தாகக் கூறினர். அஹிம்சை நடையில் வந்த பெண்மணி இவருக்கு தனியாக ஒரு சிறு ஜீனாலயம் அமைவதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்வதாகக் கூறினார்..அவருக்கு தீர்த்தங்கரின் அருள வேண்டி பிராத்தித்துவிட்டு எங்கள் பயணத்தைத் மேலும் தொடர்ந்தோம்.


தீர்த்தங்கரர் - உப்புகுளம் (அரக்கோணம் )
இவரை காவனூர் பார்சுவநாதரை தரிசனம் செய்து விட்டு திரும்பும்போது காண்பது என்ற திட்டம்...மாறுதலுடன், அரக்கோணத்தின் ஒரு பகுதியான உப்புகுளத்தில் உள்ள தீர்த்தங்கரரை தரிசித்து விட்டு காவனூர் செல்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

அரக்கோணம் நகரின் ஒருபகுதியான உப்பு குளம் பெருமாள் கோவிலின் பின்புறம் இவர் வெய்யிலுக்கும் மழைக்கும் தன்னையே அர்பணித்துக்கொண்டு நமக்கு அருளுகின்றார், தியான நிலையில் அமர்ந்து. சாமரதாரிகள் இருவர் தீர்தங்கரின் இருபுறமும். லாஞ்சனம் எதுவும் இல்லாததால் இந்த தீர்த்தங்கரர் யார் என்று இனம் காண முடியவில்லை.


பார்சுவநாதர் – காவனூர்.
49வது அகிம்சை நடையின் கடைசியாக நாங்கள் கண்டது பார்சுவநாதர் காவனூரில். இவர் ஊரில் ஒதுக்குப்புறமாக பாழடைந்த கோவிலில் இருந்து அயல் நாட்டிற்க்கு செல்ல இருந்தவர் தற்போது பெருமாள் கோவிலில் பாதுகாப்பாக இருக்கின்றார்.
கடத்தல் காரர்களால் கடத்தப்பட்டு, சென்னை துறைமுகத்தில் கப்பலில் அயல் நாடு செல்லவேண்டி இருந்தவரை மீட்டுக்கொண்டு வந்து உள்ளனர், அபராதம் கட்டி.  5 தலை நாகத்தின் கீழ் கைகள் தொங்க விட்டபடி தியானத்தில் நின்ற நிலையில் இருக்கின்றார். இருபுறமும் சாமரதாரிகள் காட்டப்பட்டு உள்ளனர். அஹிம்சை நடையினர் வேண்டுதலுக்கு இணங்க பாலாஜி போக்குவரத்து நிறுவனத்தின் உரிமையாளர் பார்சுவநாதரை பழைய ஜீனாலயத்தைப் புரணமைத்து அதில் நிர்மானம் செய்ய உதவுவதாக உறுதி அளித்தார். மேலும் எங்களுக்கு மதிய உணவும் வழங்கிய அவர்களுக்கு நன்றி கூறி நாங்கள் சென்னை திரும்பினோம்.



50வது அஹிம்சை நடை.. பிப்ரபவரி 04, 2018   
பிப்ரவரி, 2018 , மாத அஹிம்சை நடை ஒரு சிறப்பு வாய்ந்தது என்னைப் பொறுத்த வரை. திருமதி சசிகலா அவர்கள் 50வது அஹிம்சை நடையைப் பற்றி கூறுகையில், இரண்டு தீர்தங்கர்களை மட்டும் காணுகின்றோம்.. பின்பு பங்கு பெறுபவர்கள் திருநறுங்குன்றத்தில் நடக்கும் நற்காட்சி திருவிழாவிற்க்கு சென்று விட்டு இரவுதான்,  சென்னை திரும்புவார்கள் என்று கூறினார். சரி நாமும் அவர்களுடனேயே பயணிப்போமே என்று முடிவெடுத்து அவர்களுடனேயே பயணித்தது ஒரு சுகமான அனுபவமாக அமைந்தது. வழக்கம் போல ஆதம்பாக்கம் ஜீனாலயத்தில் இருந்து கிளம்பியது எங்கள் பயணம்.

தீர்த்தங்கரர் - நெற்குணம்
நாங்கள் நெற்குணம் ஊரை அடைந்தபோது   திருநறுங்குன்றம் நற்காட்சி திருவிழாவிற்குச் செல்லும் அன்பர்களும் எங்களுக்கு முன்பே வந்து இருந்தனர். அவர்களும் இந்த அஹிம்சை நடையில் பங்கு கொண்டனர். இந்த அஹிம்சை நடையை திரு தனஞ்செயன் அவர்கள் வழி நடத்தினார். நெற்குணம் ஊரின் இரண்டு தெருக்கள் வழியே சென்ற அஹிம்சை நடை மண்ணில் புதைந்து கிராமத்தாரால் மீட்டு எடுக்கப்பட்ட தீர்த்தங்கரர் இருந்த இடத்தில் முடிந்தது.

தீர்த்தங்கரர் பீடத்தில் லாஞ்சனம் தெளிவாக இல்லாததால் யாரென்று உறுதிப்படுத்த முடியவில்லை. சாமரதாரிகள், யக்ஷன் யக்ஷி தெளிவாக இருந்த நிலையில், தீர்த்தங்கரரின் முகம் மட்டும் சிதைந்து இருந்தது மனதில் சிறிய வலியை ஏற்படுத்தியது.




தீர்த்தங்கரர் – ஓங்கூர் (கரிக்கம்பட்டு )
எங்களின் அடுத்த பயணம் ஓங்கூர் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் ஒரு சிவன் கோவிலின் முன்பு நிறுவப்பட்டு இருந்த ஒரு தீர்த்தங்கரரை நோக்கி. . இது முழுமையாக முடிக்கப்படாத ஒரு தீர்த்தங்கரரின் சிற்பம். செதுக்க  உபயோகித்த உளியின் சுவடுகள் அதிகமாக தெரிந்தது. முக்குடைக்கும் தீர்த்தங்கரருக்கும் உள்ள அளவுகள் சரியாக இல்லை. சாமரதாரிகளோ அல்லது சாமரமோ காட்டப்படவில்லை.



ஸ்ரீபார்சுவநாதர் ( அப்பாண்டை நாதர் ) – ஜீனாலயம், திருநறுங்குன்றம்.
50வது அஹிம்சை நடைக்குப்பின்பு, சிலர்  மட்டும்  சென்னைக்குத் திரும்பி விட மீதமிருந்தோர் திருநறுங்குன்றம் அப்பரை ஆண்ட நாதர் ஜீனாலயத்தை நோக்கி எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். வழியில் திரு மோகன் மற்றும் தனஞ்சயன் அவர்கள் ஜீனாலயத்தைப் பற்றியும் நற்காட்சி திருவிழா பற்றியும் கூறினர். தமிழ் நாட்டில் இருந்து பெரும்பாலான தமிழ் சமண மத அன்பர்கள் அன்று கூடுவர் என்றும் கூறினர். மலையை நெருங்க நெருங்க அது நன்றாகத் தெரிந்தது. ஆங்கங்கே சிற்றுந்துகள், மகிழுந்துகள், பேருந்துகள் நிறுத்தப்பட்டு இருந்தது. அடிவாரத்தில் இருந்து ஜனவெள்ளம். ஜன வெள்ளத்தில் நீந்தி அப்பாண்டை நாதரை வழிபட சுமார் இரண்டு மணிநேரம் ஆனது.

மலைமீது இருந்த சமணர் படுக்கைகள், ஜீனாலயத்திற்க்கு சோழர், பாண்டியர், விஜயநகர பேரரசுகள் ஜீனாலயத்திற்கு நன்கொடை கொடுத்த கல்வெட்டுக்களை பார்த்துக் கொண்டு கீழிறங்கினோம். வயிற்றுப்பசிக்கு அன்னதானம் குழுக்களாலும், ஆறிவு பசிக்கு சமண மதம் பற்றிய புத்தகங்கள் கழிவு விலையிலும் கிடைத்தது. சில புத்தகங்கள், புதுச்சேரி பிரான்சு அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட குருந்தகடு வாங்கிக் கொண்டு சென்னையை நோக்கி பயணித்தோம்.     








ஸ்ரீ ஆதிநாதர் ஜீனாலயம் – கோலியனூர்.
இடையில் அன்பர்கள் இவ்வளவு தூரம் வந்து விட்டோம். கோலியனூர் சென்னை செல்லும் வழிதானே. ஆதி நாதரையும் தரிசித்து விட்டுச் செல்வோமே என்று கூறினர். புதிய ஜீனாலயம் என்பதால் முதலில் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தெரியவில்லை. அனால் அங்கு சென்ற பின்பு தான் அங்குள்ள பழைமை தெரிந்தது. புதியதாகக் கட்டப்பட்ட இடத்தில் பழைய ஜீனாலயத்தின் எச்சங்களான தீர்த்தங்கரர் சிலைகளும் சிதைந்த கல்வெட்டு. தூண்களும் 1500 வருடங்களுக்கு முற்ப்பட்ட சென்னை விமான நிலைய விரிவாக்கத்தின் போது அகழ்ந்து எடுக்கப்பட்ட ஆதிநாதர் சிலைகளும் என்னுடைய புதிய ஜீனாலயம் என்ற எண்ணத்தை மாற்றச் செய்தது. ஒரு சரித்திரத்தில் இடம் பெற்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஜீனாலயத்திற்கு சென்று வந்த ஒரு உணர்வை ஏற்படுத்தியது. ஆதிநாதரின் தரிசனத்திற்குப் பிறகு நிறைந்த மன உணர்வுடன் சென்னை திரும்பினோம்.







நான் கலந்து கொண்டது இரண்டே இரண்டு அஹிம்சை நடைகளாயினும் நான் கற்றுக்கொண்டது அதிகம். அதனிலும் முக்கியமானது திருமதி சசிகலா, தனஜ்செயன், மோகன், முனைவர் அஜிததாஸ் அவர்களின் நட்பு. நன்றி என்ற ஒற்றை வார்த்தையால் அதனை வெளிப்படுத்த முடியாது. எனினும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும், நன்றிகளும். மீண்டும் சந்திப்போம் பிறிதொரு சமயத்தில்.. அந்த அப்பாண்டைநாதரின் அருளால்.

நான் பிறப்பிலே சமணன் இல்லாவிட்டாலும் சமணத்தைப்பற்றி  அறிந்து கொள்ள முயற்ச்சித்து இருக்கின்றேன். இந்த அஹிம்சை நடை கட்டுரையில் ஏதாவது தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.. திருத்திக்கொள்கின்றேன். நன்றி. வணக்கங்கள்..
வேலுதரன் ( V A Veluswamy )
முக நூல் : https://www.facebook.com/velu.chamy.756

வலைத்தளம் : http://veludharan.blogspot.in/

1 comment: