Thursday, 20 July 2023

Tirthankaras / Parshvanath Tirthankara – Omandur, Atchipakkam, Avanipur and Ongur, Villupuram District, Tamil Nadu.

Ahimsa Walk / அஹிமசை நடை 83.
தமிழ் சமண சமயத்தினரால் மாதம் தோறும் நடத்தப்படும் அஹிம்சை நடையின் நீட்சியாக, இந்த 83 வது அஹிம்சை நடை ஜூலை மாதம் 9ந்தேதி, திண்டிவனம் நகரத்தின் அருகே உள்ள ஓமந்தூர், ஆட்சிப்பாக்கம் அவணிபூர் மற்றும் ஓங்கூர் ஆகிய ஊர்களில் உள்ள தொன்மை வாய்ந்த சமணத் தடயங்களைத் தரிசிக்க ஏற்பாடு ஆகி இருந்தது.  வழக்கம் போல ஆதம்பாக்கம் சமணர் கோயிலில் இருந்து கிளம்பிய சிற்றுந்தில் சுமார் 6 மணிக்கு கிளம்பினோம் திண்டிவனத்தை நோக்கி…

திண்டிவனத்தில் ஒருங்கினைந்த சென்னை மாகாணத்தின் முதல், முதன்மந்தியாக 1947 முதல் 1949 வரை இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த ஐயா ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியாரின் மணிமண்டபத்தில் ஏற்கனவே குழுமியிருந்த அன்பர்களுடன் நாங்களும் இணைந்து கொண்டோம். காலை சிற்றுண்டிக்குப் பிறகு நம் அஹிம்சை நடைக்குழு முதலில் சென்றது ஓமந்தூர் சமண தீர்த்தங்கரர் பிம்பத்தைக் காண…

Tirthankara, Omandur, Villupuram District, Tamil Nadu.

அவ்வூர்காரர் ஒருவரின் வழிகாட்டுதலுடன் ஓரளவு தீர்த்தங்கரர் இருந்த பகுதியை நெருங்கினாலும் அவரை தரிசிக்க முடியாதபடி முட்புதர்களும், கற்பாறைகளும் வழியை மறைத்து நின்றன. தட்டுத்தடுமாறி நீண்ட தேடலுக்குப் பிறகே தலையின்றி கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் இருந்த தீர்த்தங்கரர் பிம்பத்தைத் தரிசிக்க முடிந்தது. தீர்த்தங்கரர் கருங்கல்லால் தனி பிம்பமாக ( புடைப்புச்சிற்பமாக இல்லாமல் ) செதுக்கப்பட்டு தலையின்றி ( சேதப்படுத்தப்பட்டு ) சுமார் ஆயிரம் வருடத்திற்குப் பிறகும் முன்னும் பின்னும் அழகாகக் காணப்பட்டார். தலை மட்டும் சேதம் அடையாமல் இருந்திருந்தால் சிற்பக்கலையின் உச்சமாக இருந்திருக்கும். இத்தீர்தங்கரர் "தலைவெட்டி முனியப்பன்" என்று ஊர் மக்களால் வழிபடப்படுகின்றார். ஒவ்வொறு வருடமும் சித்திரை மாதம் ஓமந்தூரில் உள்ள காவல் தெய்வங்களுக்கு ஆறு நாட்கள் நடக்கும் திருவிழாவின் ஆரம்பமாக இந்த தலைவெட்டி முனியப்பனுக்கு படையல் போட்டுவிட்டு திருவிழா ஆரம்பமாகுமாம். அஹிம்சைநடை உறுப்பினர்களின் வழிபாட்டிற்குப் பிறகு எங்களின் அடுத்தபயணம் ஆட்சிபாக்கம் பார்ஸ்வநாதரை நோக்கித் தொடர்ந்தது...

LOCATION OF THE TIRTHANKARAR    : CLICK HERE



Ancient Shri 1008 Bhagwan Parshwanath Digambar Jain Temple, Avanipur Road, Atchipakkam, Villupuram District, Tamil Nadu.

ஆட்சிபாக்கம் பார்ஸ்வநாதர் புடைச்சிற்ப தொகுப்பாக ஒரு சிறிய மலைமீது மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்டு இருந்தது. சிற்பதொகுப்பு உள்ள பாறையை கருவறையின் பின்புறச்சுவராக பாவித்து முன்புறம் செங்கற்களால் கருவறை கட்டப்பட்டு இருந்தது. பார்ஸ்வநாதரின் சிற்பத்தொகுப்பு அவருடைய  முந்தைய பிறவியின் வரலாற்றை மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்டு உள்ளது. பார்ஸ்வநாதர் காயோத்சர்கமாக நின்ற நிலையில் காணப்படுகின்றார். தரனேந்திரன் சர்பமாக பார்ஸ்வநாதரின் தலைமீது கமடனின் துன்புறுத்தல்களில் இருந்து காக்க குடை பிடிக்க,  அதற்கும் மேலே பத்மாவதி தரனேந்திரனைக்காக்க வஜ்ரகுடை பிடித்துக்கொண்டு இருக்கின்றனர். இடதுபுறம் மேலே, பார்ஸ்வநாதர், முற்பிறவியில் மறுபூதியாக பிறந்து தன் அண்ணன் கமடனால் ( பாறாங்கல்லை தலை மீது போட்டு ) கொல்லப்பட்டதின் நிகழ்வை நினைவு கூறும்விதமாக செதுக்கப்பட்டு உள்ளது. கீழே இடது புறத்தில் பார்ஸ்வநாதரின் காலருகே, கமடன் தன் எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில், சரணடைந்து வணங்கும் நிலையில் காட்டப்பட்டுள்ளது. பார்ஸ்வநாதர் சிற்பத்தொகுப்பு வழிபாட்டில் இருக்கின்றது. அபிசேகம் மற்றும் தூப தீப ஆராதனைக்குப் பிறகு, சமண சமய அறிஞர்கள் திருவாளர்கள் ஸ்ரீதரன், முனைவர் கனக அஜிததாஸ் மற்றும் தஞ்சை சுகுமார் ஆகியோர் சமண சமயத்தின் கோட்பாடுகளையும், நம் வாழ்வில் கடைபிடிக்கவேண்டிய அறநெறிகளைப்பற்றி எடுத்துரைத்தனர். பின்பு மலையின் அடிவாரத்தில் மதிய உணவு சமணசமய அன்பரால் வழங்கப்பட்டது. வாழ்த்துக்கள் அவருக்கும் அவரின் குடும்பதாருக்கும். மதிய உணவிற்குப் பிறகு அஹிம்சை நடையின் அடுத்த பயணம் அவணிப்பூர் தீர்த்தங்கரர் மற்றும் அறவாழிக்கல்லை நோக்கி தொடர்ந்தது.

LOCATION OF PARSHVANATH TIRTHANKARAR TEMPLE : CLICK HERE



Ancient Jain Temple with Brahma Yaksha, Aravazhikal & Tirthankara, Avanipur, Avanipur, Villupuram District, Tamil Nadu.

அவணிப்பூர் தீர்த்தங்கரர், பிரம்மயட்சன் / சாஸ்தா மற்றும் அறவாழிகல் அனைத்தும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தினுள் மரத்தின் அடியே ஒருமேடையின் மீது ஸ்தாபிக்கப்பட்டு இருந்தனர். இம்மேடை திரு பாகுபலி மற்றும் திருமதி வாசுகி பாகுபலி ஆகியோரின் பங்களிப்பில் அஹிம்சை நடையின் மூலமாக கட்டப்பட்டது. இதில் தீர்த்தங்கரர் பொயு 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவராகவும், அறவாழிக்கல் மற்றும் பிரம்மயட்சன் பொயு 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகவும் வரலாறு அறிஞர்களால் கணிக்கப்படுகின்றது. தீர்த்தங்கரரின் தலைமீது காட்டப்படும் முக்குடை சிதைக்கப்பட்டு உள்ளது. அறவாழிக்கல்லின் மேற்புறம் முக்குடை, பிண்டிமரம் மற்றும் சாமரம் காட்டப்பட்டு உள்ளது. கீழ்பகுதியில் பத்மநிதியும், தர்மசக்கரமும் காட்டப்பட்டு உள்ளது. இங்கு காட்டப்பட்டு இருக்கும் உருவம் பத்மநிதி அல்லவென்றும் அவர் சார்வான யக்ஷன் தலையில் தர்ம சக்கரத்தை தாங்கிச் செல்வதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது. அவணிப்பூர் சமணசமய சின்னங்களைப் பார்வையிட்ட பின்பு அஹிம்சை நடையின் அடுத்த இடமான ஓங்கூரை நோக்கி எங்கள் பயணம் துவங்கியது...    

LOCATION OF THE TIRTHANKARAR    : CLICK HERE







Ancient Jain Idol / ஆன்சியண்ட் ஜெயின் ஐடால்/ Tirthankara, Ongur, Villupuram District, Tamil Nadu.
ஓங்கூரில் சென்னை திருச்சி நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள சிவன் கோயில் வெளிப்புறச் சுவற்றின் அருகே இருந்த தீர்த்தங்கரர் நாங்கள் முன்பு கண்ட இடத்தில் இருந்து சிவன் கோயிலுக்கு பின்புறம் ஒரு காலியிடத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டு இருந்த மேடை மீது ஸ்தாபிக்கப்பட்டு இருந்தார். புதிதாக கோயில் கட்டும் பணியும் நடந்து கொன்டு இருக்கின்றது. கூடிய விரைவில் கோயில் கட்டுமான பணிகள் முடிந்து அருகர் நிலையாக அங்கே செல்ல அந்த அருகரையே வேண்டிக்கொள்வோம். இத்துடன் 83ஆவது அஹிம்சை நடை நிறைவுக்கு வந்தது..  

LOCATION OF THE TIRTHANKARAR    : CLICK HERE



A New temple under construction
--- OM SHIVAYA NAMA ---

No comments:

Post a Comment