Monday, 8 June 2026

Tirthankara image at Sri Brahmeswarar Temple and Ahimsa Walk 108, Kadapakkam, Tiruvallur District, Tamil Nadu.

This 108th Ahimsa Walk, organised by the Tamil Jains at Kadapakkam, near Pulicat, was a part of “Shiva, Vishnu Temples visit and 108th Ahimsa Walk” in Tiruvallur District on 29th March 2026.


அஹிம்சை நடை 108.
வழக்கமாக மாதத்தின் முதல்வாரத்தில் நடைபெறும் அஹிம்சை நடை, இந்த மாதம் சில நாட்கள் கழிந்து 29ந்தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வந்தது. அந்த அறிவிப்பு வருவதற்கு முன்பே திருவள்ளூர் மாவட்டம் கடப்பாக்கத்தின் சிவன் கோயில் வளாகத்தில் சென்னை புழல் பரத், நேமிராஜ் மற்றும் அவர்களின் குழுவினரால் இனம் காணப்பட்ட தீத்தங்கரரின், குறுகிய காணொளிப்படம் வாட்ஸப் புலனத்தில் காண நேரந்தது. ஏற்கனவே, தூங்கானை மாட (ககஜபிருஷ்ட விமானம்) கோயில்களை ஆவனப்படுத்திக்கொண்டு இருப்பதால், அக்காணொளியில் காணப்பட்ட சிவன் கோயில் தூங்கானைமாட அமைப்பை ஒத்துக் காணப்பட்டதால், கோயில் மற்றும் தீர்த்தங்கரர் என இரண்டையும் எப்படியும் காண வேண்டும் என்ற ஆவலை மேலும் அதிகரிக்கச் செய்தது. அனால் அந்த சிவன் கோயிலின் சரியான அமைவிடம் கிடைக்காததால், நண்பர்களின் உதவியுடன் கூகுல் மேப்பில் ஓரளவு கண்டு பிடித்து, மார்ச் மாதம் 29ந்தேதி கண்டிப்பாகச் செல்ல திட்டமிட்டு இருந்தேன். நான் செல்ல திட்டமிட்ட தேதியும், 108வது அஹிம்சை நடையின் தேதியும் இணைந்தது ஒரு அதிர்ஷ்டமே. திட்டமிட்டபடியே, நான் மேலும் இரண்டு கோயில்களின் தரிசனம் முடித்துவிட்டு கடப்பாக்கத்தில் அஹிம்சை நடை அன்பர்களுக்காக காத்து இருந்தேன்.
 
அஹிம்சை நடை அன்பர்கள் பேராசிரியர் கனக அஜித்ததாஸ் அவர்களின் தலைமையில், திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே சுப்பாரெட்டிபாளையத்தின் ஒரு பகுதியான பள்ளிபுரத்தின் வயல்வெளியில் காணப்பட்ட, எண்ணைச் சாமியார் என அழைக்கப்படும் தீர்த்தங்கரரை தரிசனம் செய்துவிட்டு (வானமே கூரையாக வெய்யிலிலும் மழையிலும் சுமார் ஆயிரம் வருடங்களாக தியானத்தில் அமர்ந்து இருக்கின்றார். ஆய்வாளர்கள் இத்தீர்த்தங்கரர் சோழர்காலத்தைச் சார்ந்தவராக கூறுகின்றனர்) சுமார் 11.30 மணி அளவில் கடப்பாக்கம் வந்து சேர்ந்தனர். தீர்த்தங்கரருக்கு அபிசேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு பூமாலை அணிவிக்கப்பட்டு பிராத்தனை நடத்தப்பட்டது. பின்பு அஹிம்சை நடை குழுவினரால், கோயிலின் நிர்வாகப் பொருப்பாளர் திரு. திருவேங்கடம் அவர்கட்கு மரியாதை செய்யப்பட்டது. மேலும் அஹிம்சை நடைக் குழுவினரால் ஒரு சிற்றாலயம் அமைக்க அனுமதி கோரிக்கையும் வைக்கப்பட்டது. ஊர் மக்களிடமும் கலந்து பேசிய பின்பு சாதகமான பதில் அளிப்பதாக உறுதி கூறினார். இந்த மாத 108 ஆவது அஹிம்சை நடை இளையோர்களால் முன்னெடுக்கப்பட்டு நடத்தப்பட்டது ஒரு தனிசிறப்பு.

தீர்த்தங்கரர் பற்றிய தகவல்கள்….
தீர்த்தங்கரர் சுமார் இரண்டு அடி உயரத்தில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டு உள்ளது. தீர்த்தங்கரர் காயோசர்கம் என்ற நின்றநிலையில் காணப்படுகின்றார். தலைக்கு மேல் முக்குடை காணப்படுகின்றது. இருபுறமும் சாமரதாரிகள் காணப்படுகின்றனர். வழக்கமாகக் காட்டப்படும், அசோகா சுருள் கொடி காட்டப்படாமல், திருவாசி, அதன் இருமுனைகளில் விரிந்த மலர் போன்ற அமைப்பு காட்டப்பட்டு உள்ளது. மேலும் தமிழக பகுதி எங்கும் காணக்கிடைக்காத சங்கு மற்றும் சக்கரம்/ தாமரை மலர் (செல்வத்தின் அதிபதிகளான சங்க நிதி, மற்றும் பத்ம நிதியின் அடையாளமாக) புடைப்புச்சிற்பங்கள் தீர்த்தங்கரர் தலையின் இருபுறமும் காட்டப்பட்டு இருப்பது ஒரு கூடுதல் சிறப்பு ஆகும். ஆய்வாளர்கள் இந்த தீர்த்தங்கரர் சுமார் 14 அல்லது 15 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சார்ந்தவராக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.


கோயிலின் நிர்வாகப் பொருப்பாளர் திரு. திருவேங்கடம் அவர்கள் கூறுகையில், இந்த சிவன் கோயில் 2003 ஆம் வருடம் வரை பாழடைந்து கிடந்ததாகவும், புலம் பெயர்ந்த பெரியோர்கள் மற்றும் கிராமத்தாரின் பங்களிப்புடன் கோயில் புரணமைக்கப்பட்டதாகவும், சிவன் அப்பாலீஸ்வரர் எனவும், அதற்கு பின்புறம் உள்ள குளம் அப்பாகுளம் என அழைக்கப்பட்டதாகவும் கூறினார் அப்புரணமைப்பின் போது, ஜேசிபி இயந்திரத்தினால், இத்தீர்த்தங்கரர் வெளியே வந்தார் எனக்கூறினார். (சேதம் ஏற்படாமல் இருந்ததே பெரிய அதிசம்). சைவ சிற்பங்களில் இருந்து மாறுபட்டு இருந்ததால், கோயிலில் நிலை நிறுத்தவில்லை எனவும் கூறினார்.    

LOCATION OF THE TIRTHANKARA: CLICK HERE  




--- OM SHIVAYA NAMA --- 

2 comments:

  1. மிகச் சிறப்பு அய்யா மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க அம்மா

      Delete