Sunday 10 October 2021

வேழக்காடுகளில்சோழச்சுவடுகள் - Sri Mahaligeswarar Temple & Sri Chamundeeswari Amman Temple, ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோயில், சாமுண்டீஸ்வரி கோயில், ஹொன்னூர் / Honnur, Chamrajnagar District, Karnataka

கட்டுரை ஆசிரியர்
திரு ஜான் பீட்டர், வரலாற்று ஆய்வாளர், தொல்லியல்துறை முன்னாள் அதிகாரி, மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர், தாளவாடி 

சாம்ராஜ்நகரிலிருந்து தலக்காடு செல்லும் சாலையில் எலந்தூர் தாலுகாவிற்கு முன்பாக 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ஹொன்னூர் என்னும் பெயருடைய இச்சிறு கிராமம். இவ்வூர் பழந்தமிழ் கல்வெட்டுகளில் "முடிகொண்டசோழமண்டலத்து கங்கை கொண்ட சோழவளநாட்டு பதிநாட்டு பொன்னூர்" என குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் 12 நூற்றாண்டு ஹொய்சாளர் தமிழ் கல்வெட்டில் இவ்வூரானது "பொன்னூரான துளுவமாதேவி சதுர்வேதிமங்கலம்" என்று பிரமதேயமாக  விளங்கியதையும் காண்கிறோம்.


கோயில்கள் -:
இங்கு தற்போது ஹொய்சாளர் காலத்தை சேர்ந்த மஹாலிங்கேஸ்வரர் கோயில், சாமுண்டீஸ்வரி திருக்கோயில், கங்க தேசத்தின் நாட்டார் தெய்வமான இராக்காசம்மா நவர சன்னதி போன்றவை அமைந்துள்ளது.

கல்வெட்டுகள்-; கங்கர் கால ஆநிரைமீட்டல் நடுகல் கல்வெட்டு, சோழர் கால வணிக கல்வெட்டு, ஹொய்சாளர் கால தமிழ் மற்றும் ஹள கன்னடமொழி கல்வெட்டுகளுமாக மொத்தம் 7கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு எபி.கர்.மடலம் நான்கு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வெட்டு செய்திகள்-:
பொ.யு.10ம் நூற்றாண்டை சார்ந்த கங்க அரசன் பெர்மானடியின் 3 ம் ஆட்சியாண்டு ஹள கன்னட மொழி நடுகல் கல்வெட்டொன்று இவ்வூரை சேர்ந்த பொன்னவய்யா என்ற வீரன் கள்வர்கள் ஆநிரைகளை கவர்ந்து சென்ற போது அவர்களுடன் ஏற்பட்ட பூசலின்றி காரணமாய் உயிர் துறந்து விட்டதால் அவனின் சகோதரனால் எடுப்பிக்கப்பட்டது இது ஆநிரைமீட்டல் நடுகல்லாகும்.

சோழர் கால வணிகர்கள் கல்வெட்டு-:
பண்டைய காலத்தில் இங்கு சோழர் கால வணிகர் குழுக்களான நானாதேசிகர் பதிணென்பூமி விஷயத்தார், திசையாயிரத்து ஐந்நூற்றுவர் போன்றோர் பரவலாக வசித்து வந்ததும் பொன்னூர் மட்டுமின்றி பதிநாட்டு பல்வேறு ஊர்களிலுள்ள கோயில்களுக்கு நிவந்தம்,தானங்களை வழங்கி நாட்டு நற்பணியில் சிறந்து விளங்கியதையும் இங்கு கிடைக்கப் பெறும் தமிழ் கல்வெட்டுகள் மூலமாக அறியற்பாலாகிறது.

11 ம் நூற்றாண்டு சோழர்கால தமிழ் கல்வெட்டொன்று கங்கை கொண்ட சோழவளநாடு பொன்னூர் பதிணென்பூமிநாட்டார் திசையாயிரத்து ஐந்நூற்றுவர் குழுவை சேர்ந்த நானாதேசியன் அம்பலவாணன் என்பவன் தழைக்காடு எ இராஜராஜபுரத்திலிருக்கும் பெரியநகரீஸ்வரமுடைய நாயனார்க்கு தேவதானமாக நஞ்சை நிலத்தை கொடையாக வழங்கியதும் இத் தன்மத்திற்கு சாட்சியாக வீரகங்கரசர், இராஜேந்திர பெருமாடி, பன்ம காமுண்டா, இருமடி உத்தம சோழா போன்றோர் கையொப்பமிட்டதையும் கூறுகிறது. இதே காலத்தை சேர்ந்த சிதைந்த நிலையிலுள்ள தமிழ் கல்வெட்டொன்று பதிநாட்டு வேலாபுரம் திசையாயிரத்து ஐந்நூற்றுவர் பற்றி குறிப்பிடப்படுகிறு ஆனால் வேலாபுரம் என்றழைக்கப்பட்ட பகுதி தற்போது யாதென அறியகிடக்கவில்லை!.

ஹொய்சாளர் கால தமிழ் கல்வெட்டுகள்-:
12 ம் நூற்றாண்டு ஹொய்சாளர் கால தமிழ் கல்வெட்டு பொன்னூரைச் சேர்ந்த "பரதேசி மலையரசன் சிறுமயன் கோட்டுபுக்கன்" என்பவன் இங்கு தண்ணினேரி என்ற பெயரில் ஏரியை வெட்டுவித்து அம்பல ( மண்டபம்) த்தையும் கட்டுவித்தான் என குறிப்பிடுகிறது தற்போது இந்த ஏரி கெங்கெரே என அழைக்கப்படுகிறது. ஏரியின் கரைப்பகுதியில் தான் கங்கர் மற்றும் சோழர் கால கல்வெட்டுகள் காணக்கிடைத்ததாக ஆவணத்தில் குறிப்பிடப்படுகிறது ஆனால் கட்டுரையாளரின் கள ஆய்வின் போது அந்த ஏரியின் நிலப்பரப்பு பகுதிகள் சிலவற்றை தனியார் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் மேற்கொண்டு வருவதும் தெரியவந்தது மேலும் எஞ்சிய பகுதிகளில் புதர் மண்டி முட்செடிகள் நிறைந்து காணப்பட்டதால் எவ்வளவு முயன்றும் அந்த சோழர் வணிக குழுவினர் கல்வெட்டுகளை கண்டறியவியவில்லை! ஆனால் அங்கு நடுகற்கள் உதிரி சிற்பங்கள் சிலவற்றை காணமுடிந்தது.

இங்குள்ள மஹாலிங்கேஸ்வரர் கோயில்
ஹொய்சாளார் காலத்தியது தற்போது முற்றிலும் புனரமைக்கப்பட்டு வண்ணம் பூசிய நிலையில் காட்சிதருகிறது மேலும் இக் கோயிலின் வட திசையில் பலகை கல்லில் தமிழ் மொழி கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இது ஹொய்சாள பேரரசன் இரண்டாம் வீரபல்லாளனின் பொ.யு.1191 ஆட்சியாண்டு கல்வெட்டாகும் இதில் இவ்வூரானது பொன்னூரான துளுவமாதேவி சதுர்வேதி மங்கலம் என குறிப்பிடப்பட்டுள்ளது தக்காணச்சக்கரவர்த்தி என்று போற்றப்படும் இரண்டாம் வீரபல்லாளன் துளு நாட்டை வெற்றி கொண்டு அந்நாட்டு அரசியை மணந்திருந்தான் தமக்கு முன்னதாக கங்க மண்டலத்தை ஆட்சி செய்த சோழர்களை அடியொற்றி ஹொய்சாள அரசர்களும் தமது அரசியின் பெயரில் சதுர்வேதி மங்கலம் அமைத்தை இங்கு காண்கிறோம்!

மேலும் இக்கல்வெட்டில் அபாதிருண காமுண்டன் மகன் மார காமுண்டன் என்பவன் கங்கை கொண்ட சோழவளநாட்டு சதுர்வேதி மங்கலமான அகரா என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும் குலசேகரநாயனமுடையார்க்கும் மற்றும் தேவியரான துர்க்கை அம்மனுக்கும் ஸ்ரீதானமாக நிலத்தை தானமாக வழங்கியதையும் குறிக்கிறது.

No comments:

Post a Comment