Wednesday 18 August 2021

காசி விஸ்வநாதர் திருக்கோயில், தளவாய்ப்பாளையம், திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு.

                                     மனிதன் தன்னையும் , தான் வாழும் இடத்தையும் அடையாளப்படுத்திக் கொள்ள பெயர்களை சூட்டிக் கொண்டான் . இவ்வாறு சூட்டப்பட்ட ஊர்களின் பெயர்களை ஆராயும்போது அவை வரலாற்றை சார்ந்ததாகவோ , மக்களின் வாழ்வியல் அல்லது பண்பாடு சார்ந்ததாகவோ உள்ளன . அவ்வாறு பார்க்கும்போது கொங்கு நாட்டில் உள்ள பல ஊர்ப் பெயர்களில் இரண்டு கூறுகள் இருக்கின்றன . முதற்பெயர் சிறப்பு பெயராகவும் , இரண்டாவது பெயர் பொது பெயராகவும் உள்ளது . கொங்கு நாட்டில் உள்ள "தளவாய்பாளையம்" என்னும் ஊரைப் பற்றி காண்போம் .

                              திருப்பூர் மாவட்டம் , வாய்ப்பாடி அருகே உள்ள பழமையான ஊர் "தளவாய்ப்பாளையம்" . ஊரின் முதற்பெயரான "தளவாய்" என்ற சொல்லுக்கு "தளம் ஒன்றின் தலைவன்" என்பது பொருளாகும் . அதாவது ஒரு படையின் அதிகாரத்தை தன்னகத்தே கொண்ட தலைவன் என்றும் பொருள் . 

                            கிபி 14 ஆம் நூற்றாண்டில் விஜய பேரரசு தங்கள் பிரதிநிதிகளை தமிழகமெங்கும்  அனுப்பி நிலையான ஆட்சியை ஏற்படுத்தினர் . இதுவே தமிழகத்தில் நாயக்கர் ஆட்சியின் தொடக்கம் ஆயிற்று . நாயக்கர்கள் ஆட்சியில் தளவாய்கள் (அமைச்சர் போன்ற அதிகாரி) நியமிக்கப்பட்டனர் .  தளவாய் என்னும் பதவி அதிகாரமிக்க பதவியாக இருந்தது . பாளையத்தை காப்பவர்கள் பாளையக்காரர்கள் எனப்பட்டனர் . பாலையக்காரர்களுக்கு  மேலான அதிகார பதவியில் இருப்பவர் தான் தளவாய் அதிகாரி .

                              அடுத்து  இரண்டாவதாக உள்ள "பாளையம்" என்னும் பொதுப்பெயர் பற்றி காண்போம் . விஜயநகர பேரரசு ஆட்சியில் காடு அழித்து நாடு உருவாக்கும் போது புது ஊருக்கு பாளையம் என்று பெயர் வைக்கப்பட்டது . கொங்கு நாட்டில் பட்டி , தொழுவு போன்ற பெயர்கள் இருந்தன ஆனால் பாளையம் என்னும் பெயர் விஜயநகர பேரரசு ஆட்சிக்கு பின் நிறைய காணப்படுகிறது .  பாளையக்காரர்கள் ஆண்ட பகுதிகளும் பெரும்பாலும் பாளையம் என முடியும். அதிகார பதவியின் பெயரில் உள்ள  "தளவாய்ப்பாளையம்" ஊரில் உள்ள பழமையான கோயிலை பற்றி காண்போம் .

                          "அருள்மிகு காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் திருக்கோயில்" என்னும் பெயரில் சுமார் 200 வருடங்கள் பழமையான சிவன் கோயில் உள்ளது . இக்கோயிலில் தட்சிணாமூர்த்தி , பைரவர் , முருகன் , ஆஞ்சிநேயர் சிற்பங்கள் உள்ளன . நாயக்கர் கால கட்டிட கலையில் இக்கோயில் விளங்குகிறது .  இங்கு கல்வெட்டுகள் எதுவும் காணப்படவில்லை . சுவற்றின் மீது மீன் சின்னமும் முதலை போன்ற அமைப்புடன் ஒரு உருவமும் காணப்படுகிறது . தற்போது கிராமமாக உள்ள இவ்வூர் ஒரு காலத்தில் தளவாய் போன்ற அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பு பெற்ற ஊராக இருந்து இருக்கலாம் .
















No comments:

Post a Comment