இலங்கையின் மாத்தறை மாவட்டத்தில் வெலிகாம Weligama என்னும் இடத்தில் உள்ள கடினமான பாறையில் குஷ்டராஜ கலா Kushtaraja gala (Kushtaraja -குஷ்டம் நோய் வந்த ராஜா, gala - கல்) என்னும் சிற்பம் காணப்படுகிறது. இச்சிற்பம் இலங்கையில் உள்ள மாகாயன பௌத்த மதத்தின் சிறந்த சிற்பங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சிற்பத்தை பற்றி இங்கு உள்ள மக்களிடையே பல கதைகள் நிலவுகின்றது. குஷ்டம் என்னும் தோல் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு வெளிநாட்டு மன்னர் வெலிகாம வந்திறங்கி, இங்குள்ள உள்ளூர் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று குணமடைந்ததால் அவர் நினைவாக செதுக்கப்பட்டது என்பது ஒரு சாராரின் கருத்து, மற்றொரு சாரார் நோய்வாய்ப்பட்ட மன்னர் ஒரு குறிப்பிட்ட கடவுளுக்கு உடல்நிலை சரியில்லாத போது காணிக்கை செலுத்துவதாக வேண்டி குணமானதும் இச்சிலையை வடித்தார் என்ற கருத்தும் நிலவுகிறது. எனினும் இவை புனைக்கதைகளாக இருந்த போதிலும் வெலிகாமா செழிப்பான நகரமாகவும் வெளிநாட்டு வர்த்தக மையமாகவும் அக்காலத்தில் கப்பல்கள் வந்து போகும் துறைமுகமாகவும் இருந்திருக்கிறது.
இந்த சிலை போதிசத்வா Bodhisattva உருவமாக இருக்க வேண்டும் என்பது அறிஞர்களின் கருத்தாக உள்ளது. கி. பி 6ம் 7ம் நூற்றாண்டில் குடையப்பட்ட சிற்பம் என்பது இலங்கை தொல்லியல் துறையினரின் கருத்தாகும்.
சிறிய தோப்பில் உள்ள பாறையில் நின்ற கோலத்தில் சுமார் 10 அடி உயர பெரிய புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ள இச்சிலை நேர்த்தியாக அமைக்கப்பட்டது. சிற்பத்தின் இரண்டு கைகளிலும் இரண்டு வெவ்வேறு முத்திரைகள் காட்டப்பட்டுள்ளது. வலது கையில் விதர்கா முத்திரையும் இடது கையில் கடகஹஸ்தா முத்திரையும் காட்டப்பட்டுள்ளது. சிலையின் மேற்பகுதி ஆடைகள் இன்றி, கழுத்திலும் தோல் பட்டையிலும் ஆபரணங்கள் அணிந்தவாறும் கீழ்ப்பகுதியில் பட்டைகள் அலங்கரிக்கப்பட்ட ஆடையுடன் கைகளிலும் அணி அலங்காரங்களுடனும் காணப்படுகின்றன. சிலையின் தலைப்பாகத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் ஜடா மகுடத்தில் தியானத்தில் அமர்ந்திருக்கும் நான்கு உருவங்கள் காட்டப்பட்டுள்ளது. மகாயான பௌத்தர்கள் பெரிதும் மதிக்கும் அமிதாப புத்தரின் உருவமும் காட்டப்பட்டுள்ளது. இவைகளை வைத்து பார்க்கும்போது இச்சிலை புத்தரின் போதி சட்வராக, அவலோகிதேஷ்வரராக Bodhisattva Avalokiteshwara இருக்கலாம் என்பது அறிஞர்களின் கூற்று. அதாவது புத்தரின் கடந்த கால வாழ்க்கை கதைகளில் அவர் ஒரு போதி சட்வராக விவரிக்கப்பட்டுள்ளார். அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்யவும், புத்தரை போல் ஞானம் அடையும் பயணத்தில் உதவுபவரே அவலோகிதேஸ்வர போதிசட்வர். தெய்வத்தன்மை, இரக்கத்தன்மை ஆகியவற்றை சிறப்பாக வெளிப்படுத்தும் போதிசத்வர்களுள் மிக உயர்ந்த வெளிப்பாடு அவலோகிய தேஷ்வரர் போதி சிற்பமாகும். மகாயான பௌத்த நம்பிக்கைகளின் படி அவலோகிதேஸ்வரரே இரக்க குணத்தின் அதிபதி ஆவார். இதனால் இப்பகுதி மக்கள் அவலோக்கியதேஷ்கர் வணங்கினால் தம் மேல் இரக்கம் கொண்டு வியாதிகளை குணமாக்குவார் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது.
...... இலங்கை பயணங்கள் தொடரும்
No comments:
Post a Comment